நாம் வாழும் காலத்திலேயே நம் கண் முன்னால் அரங்கேறிவரும் துயர நாடகம் ஒன்றை , அதிக கவனத்திற்கு கொண்டுவரப்படாத ஒன்றை கதைகளனாகத் தேர்ந்தெடுத்த இயக்குனர் வசந்தபாலனைப் பாராட்டியே ஆகவேண்டும். இதுபோன்ற கதைகளை தயாரிக்க பணம் தர சம்மதித்த ஐங்கரன் தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியனுக்கும் கருணாமூர்த்திக்கும் கூட நன்றி சொல்லவேண்டும். பதியப்படாத விசயங்கள், அல்லது பதிந்தே ஆகவேண்டியவைகள் என்று இன்னும் எவ்வளவோ வாழ்வின் துயரங்களும், நிதர்சனங்களும் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அவை ஒரு நொடியேனும் ஒரு மனித உள்ளத்தில் மின்னலாக வந்துபோனாலும் அது பற்பல மாற்றங்களை உண்டாக்கவல்லது.
அப்படியொரு மாற்றத்தின் ஒளி இப்படம், பார்த்த பலரின் உள்ளத்தில் மின்னலாக வெட்டியோ அல்லது விதையாக விதைத்தோ சென்றிருக்கலாம். சென்னை போன்ற பெருநகரத்தில் மக்கள் அலைமோதும் ஒரு கடைத்தெருவும் அதனை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு இயங்கும் உயிர்களையும் அங்காடித்தெரு நம் கண் முன்னே விரிக்கிறது. சிறு நகரங்களின் வறுமையும் அதனால் அவர்கள் நாடும் பெருநகரம், அவர்கள் மேல் நிகழ்த்தும் வன்முறையும் இதயத்தை உருக்கக்கூடிய நிகழ்வுகள்.
தன் மகனையாவது படிக்க வைத்து தன் குடும்ப வறுமையை மாற்றப்போராடும் ஒரு தந்தை. அக்கனவுகள் ரயிலோடு சேர்த்து சிதைக்கப்பட குடும்பத்திற்காக கதாநாயகன் சென்னையின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு வேலைக்குச் சேர்கிறான். தந்தையில்லாத குடும்ப பொறுப்புகள் நிறைந்த பையன்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும் தேர்வுதினத்திலேயே அவர்கள் எதிர்நோக்கும் கொடுமைகளைக் கோடிட்டுக் காட்டிவிடுகிறார்கள். சென்னையில் வந்திறங்கும் அந்த கள்ளம் கபடமற்ற உள்ளங்கள் வாழ்வுப்பிச்சை அளித்து இங்கே அழைத்து வரப்பட்டதாக அறிவிக்கும் முதலாளியின் பேச்சுக்கு மஞ்சத்தண்ணி ஊற்றிய ஆடுகள் போல தலையாட்டி ஆமோதிக்கின்றனர். காற்றில்லாத நெருக்கடியான கொடவுன்களைக் கண்டு மிரள்கிறார்கள். உணவுக்காக எச்சில் தட்டுகளுக்கு வரிசையில் நிற்கிறார்கள். ஆட்டு மந்தையைப்போல ஒருவன் காலடியில் ஒருவன் என படுத்து உறங்குகிறார்கள்.
இருந்தும் குடும்பமும் வறுமையும் அத்தனையையும் தாங்கிக்கொள்ளச் செய்கிறது. கொடவுனிலிருந்து பதவியுயர்வில் ஏசி தளத்திற்கு மாற்றப்பட்டதாக நினைக்கும் அவர்களுக்கு அது தான் மிகப்பெரிய எண்ணைக்கொப்பரை என்று அறிவுத்த வருகிறாள் கதாநாயகி. அங்கிருக்கும் எம கிங்கரன் கருங்காலி மேனேஜரைப் பற்றி வேலை செய்பவர்கள் சொல்லும் போது புரிந்து கொள்ளாமல் பின் கதாநாயகிக்கு கிடைத்த அசிங்கமான தண்டனையின் போது முழுதுமாக உணர்ந்து கொள்கிறான். ஆண்களென்றால் அடி உதையும் பெண்களென்றால் மேலே கைவைத்தலுமென அந்த மின்விளக்கு அலங்கார மாளிகையின் திரைமறைவில் நடந்தேறுகின்றன வன்கொடுமைகள்.
ஒரு பெண்ணின் கஷ்டமான சூழ்நிலையை உணர்ந்துகொள்கிறவன் அவளுக்காக கருங்காலி மேல் மூட்டையை போட்டவன் என அவளுக்கு நெருங்கியவனாக மாறுகிறான். பதிமூன்று வயதில் தங்கை வீட்டு வேலை செய்ய, தானோ மேலே கை வைக்கும் மேனேஜரை சகித்து வாழும் கொடுமை அப்பெண்ணுக்கு. படத்தின் பாடல் வரிகளில் நா. முத்துக்குமார் அழகாகச் சொல்வது போல கூண்டுக்குள் வாழும் அவர்களின் கண்ணுக்குத் தெரிகிற ஒரு துண்டு வானமாக அவர்களின் மெல்லிய காதல் மலர்கிறது.
நண்பனின் காதல் கடையின் விதிகளுக்கு பலியாகிறது
தன் நிலையை நேரடியாக விளக்கி ஒன்று சேர்ந்த அவர்களின் காதல் கடை மேனேஜரிடமும் முதலாளியிடமும் சிக்கி அடி உதைபட நேரும்போது அதை எதிர்கொண்டு மீண்டு வெளியே வருகிறார்கள். வாழ்க்கையில் சொந்தக்காலில் நிற்க முயன்ற அவர்களுக்கு வாழ்வின் விதியின் கோரப்பற்களில் சிக்கி பாதையோரத்தில் மீண்டும் ஒரு கொடுமை நிகழ்ந்தேறுகிறது. அப்போதும் மனம்தளராத அவர்கள் வாழ்வின் மேல் கொண்ட நம்பிக்கை ஆச்சரியமானதும் அதே சமயத்தில் நிதர்சனத்தில் நிகழ்ந்து வருவதுமாகும்.
ஒரு சிறு காட்சியும் கூட தேவையற்றது இல்லை. கண் தெரியாத தாத்தா, குள்ளமான மனிதர் அவரின் மனைவி, கழிப்பிடம் கழுவி வாழ்வை நடத்தும் பெருமாள் என ஒவ்வொரு சிறு கதாபாத்திரமும் கதையின் போக்கை சரியாக உணர்த்தும் காரணிகளே! அவர்களின் நடிப்பும் அசாத்தியமானது. ஜெயமோகனின் வசனங்களிலும் எங்கும் அதிகப்படியான வார்த்தையாடல்கள் இல்லை. ‘இந்த ஆம்பிளையிடமாவது மான ரோசத்துடன் இருக்கிறேனே ‘ எனக்கூறும் கதாநாயகின் வார்த்தைகள் நறுக் சுறுக். காதல் மலர்ந்து வரும் இருவருடைய பேச்சில் உள்ள யதார்த்தம் ரசிக்கத்தகுந்தது. எத்தனை பேரை உன் பின்னால் அலைய வைத்தாய் என்று ஆணும் எத்தனை பேர் பின்னால் நீசுற்றி இருப்பாய் எனப் பெண்ணும் கேட்டுக்கொள்வதும், அடுத்தவர் தோற்ற காதலின் முதல் பரிசுகளையே மீண்டும் அவர் விருப்பமாக எண்ணி பரிசளித்துக் கொள்வதுமான கவிதைக் காட்சிகள்.
ஜோதிலிங்கம் என்கிற பெயரைக்காட்டிலும் கதாநாயகி அழைக்கும் இட்டமொழிக்காரரே தான் மனதில் பதிகிறது. மகேஷுக்கு கள்ளம்கபடமற்ற முகம், முதல் படமென்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சேர்மக்கனியாக வரும் அஞ்சலி கதைகளைப் பேசும் விழியெனச் சொல்ல மிகத்தகுதியானவர். முகபாவங்கள் அவரை சிறந்த நடிகை என உணர்த்துகிறது. மிகத்தெரிந்த முகமான பாண்டி அனைவரையும் கவர்கிறார். பாண்டியின் சௌரி முடி பரிசும் அவரின் காதல் உருக்கமும் அதனை நயமாக மறுக்கும் காதலியும் மிக அழகு. பாண்டியின் காதலியாக வரும் சோஃபி என்கிற சுகுணா இயல்பான நடிப்பு. காதலிக்கப்படுகிற ஒவ்வொரு பெண்ணும் காட்டும் நாண அழகை அழகாக ப்ரதிபலிக்கிறார்.
கருங்காலியாக வரும் நடிகர், யாரப்பா இவர்? எனும்படி விழிகளை உருட்டி மிரட்டுகிறார். அவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் பல கமர்ஷியல் படங்களை இயக்கியவர். இளைய தலைமுறை பாடகர்களின் இனிமையான குரல்களில் "கதைகளைப் பேசும்" ஜிவி ப்ரகாஷும் , "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" விஜய் ஆண்ட்டனியும் என அழகான பாடல்களை தந்திருக்கிறார்கள். பாடல்வரிகளில் வழக்கம்போலவே நா முத்துக்குமார் முத்திரை பதித்திருக்கிறார். கூட்டமான கடைவீதிகளையும் கதைக்களத்தையும் அப்படியே அழகாக ரிச்சர் மரியநாதன் கேமிராவில் பதிந்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர் ஜிகே முத்துராஜ் அவர்கள் காட்சிகளின் உண்மைத்தன்மைக்கு மிக உதவி இருக்கிறார்.
அங்காடித்தெரு வாழ்வின் துயரங்களை ஒருதட்டிலும் வாழ்வின் சிறு சிறு மகிழ்ச்சித்தருணங்களை நம்பிக்கைகளை ஒரு தட்டிலும் வைத்து சமமாகத்தருகிறது.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















