தலைப்பினைப் பார்த்தவுடன், இது பெருமாளின் பத்து அவதாரங்கள் குறித்த புராணம் என்றோ, கமல் படத்தின் விமரிசனம் என்றோ நீங்கள் நினைத்துக் கொண்டால்..... மன்னிக்கவும். இது இரண்டுமே அல்ல. இது, முகாமைத்துவம் (Management) குறித்த ஒரு பார்வை. தனிப்பட்ட முறையிலோ, நிறுவனத்தின் பொருட்டோ மனிதர்கள் பற்பல பிரச்சனைகளை, சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. வெற்றியை நாடும் ஒருவர், தமது சவால்களைத் திறம்படச் சமாளிக்க வேண்டுமானால், அவர் என்னென்ன விதமான பொறுப்புகளை ஏற்கவேண்டியுள்ளது, எந்தெந்த வகையான வேடங்களை/பாத்திரங்களை (Role) ஏற்க வேண்டியுள்ளது என்பன பற்றிய ஒரு சிறு அலசலே இக்கட்டுரை.
உலகமே ஒரு நாடகமேடை; இதில் நாமெல்லோரும் நடிகர்கள் என்பது ஷேக்ஸ்பியரின் வாக்கு. ஒவ்வொருவரும், ஒரே வேடத்தில் மட்டும் நடிப்பதில்லை, பாசமிக்க தந்தை, அன்பான மகன், கண்டிப்பான அலுவலர், கனிவான சகோதரன், நம்பிக்கைக்குரிய நண்பன், வலுவுள்ள எதிரி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான வேடம் பூண்டு காட்சியளிக்கிறோம். அதே போல். ஒருவர், தமது குழு அல்லது நிறுவனத்தின் நோக்கத்தை அடைவதற்கு பற்பல செயல் திட்டங்களை (Strategy) பலவிதமான பங்களிப்பின் வாயிலாக நிறைவேற்ற வேண்டியுள்ளது. தற்போதைய நவீன முகாமைத்துவத்தில் தலைமைக்குரிய பொறுப்புகள் அல்லது தலைவன் ஏற்கவேண்டியவை எனப் பத்து வேடங்களைக் (Roles) குறிப்பிடுகின்றனர்.
1. போர் வீரர் / சாரணர் (Scout): எதிர்வரும் எந்தவிதமான ஆபத்தையும் சமாளிக்க ஒரு போர்வீரன் தயாராக இருப்பது போலவும், அரசனின்/அரசின் வெற்றிக்காக தன் உயிரையும் துச்சமாக மதித்து, துணிவுடன் செயல்படுவது போலவும் ஒருவர், தன் நிறுவனத்தின்/ தான் சார்ந்துள்ள குழுவின் வெற்றிக்காகப் பாடு படவேண்டியுள்ளது. சாரணர் போல், தனது குழுவினருக்கு ஊக்கமூட்டி, புதிய பாதைகளை வகுக்கத் தூண்டுதலும், புதுப்புது வாய்ப்புகளுக்கான தேடலை மேற்கொள்ளுதலும் தலைமைப்பண்பின் தன்மைகள். சுருங்கக்கூறின், எடுத்துக்கொண்ட செயலின் வெற்றியை / நோக்கத்தினை அடைவதற்கான புனிதப்பயணத்தினை அணியுடன் சேர்ந்து மேற்கொள்ளுவதே முதல் பங்களிப்பு ஆகும்.
2. சுழியோடி / முத்துக்குளிப்பவர் (Diver): ஒரு திட்டத்தினைத் துவக்குகையில் நுனிப்புல் மேய்வது போல் தகவல்களைச் சேகரிப்பது பின்னாளில் நட்டத்திற்கும் இழப்பிற்கும் வழிவகுக்கும்.
எந்த ஆழமான கடலையும், நீர்நிலையையும் கண்டு அஞ்சாமல் இறங்கி அந்த இடத்தின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்வது அல்லது அங்குள்ள விலைமதிப்பில்லாத பொருட்களை எடுத்துவருவது சுழியோடிகளின் குணம். அது போல் எந்த ஒரு திட்டமாயினும் / தகவலாயினும் அதன் அடிவரை ஆராய்ந்து, திட்டத்தின் தன்மை, அது குறித்த விவரங்கள், தகவலின்/திட்டத்தின் நோக்கம் என்று எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசித்து அலசிப்பார்க்கும் தன்மை மிகவும் தேவையான ஒன்று.
3. கதைசொல்லி (Story Teller): முன் நாட்களில் அரசர்கள், பிரபுக்கள் கதை கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அது போல் ஊரிலும் கதை சொல்லுவதர்கென்றே சிலர் உண்டு. இது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. கதை சொல்பவர்கள் ஒரு முக்கியமான தகவலை, நன்கு விவரித்தும், கூடுதலான, கவர்ச்சியான உபரித்தகவல்களைப்புகுத்தியும் சுவாரசியமாகக் கதைக்குள் திணித்துவிடுவார்கள். கதைகேட்பவர்களை, அக்கதையில் உணர்வுபூர்வமாக ஈடுபடச்செய்வதோடு, நல்ல படிப்பினையையும், நாட்டு நிலவரம், அரசன் / நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இனிப்புப் பூச்சு தடவிய மருந்து போல் இக்கதைசொல்லிகள் தங்கள் கதையில் புகுத்திவிடுவார்கள்.
தமது செயல் திட்டம் குறித்தோ, நிதிநிலை அறிக்கை குறித்தோ பேசுகையில் அலுப்புத்தட்டாமல், கேட்பவர்கள் அதை நன்கு புரிந்துகொள்ளும் வகையில், ஒப்புக்கொள்ளும் வகையில் முழுத்தகவல்களை அவர்கள் விரும்பும் வகையில் எடுத்துக்கூற வேண்டியது முக்கியம். மேலதிகாரிகளுடன் நிர்வாகச் சீர்திருத்தம், குறைபாடுகள் குறித்து நேரடியாகப் பேசுகையில் உரசல்கள் நேரிடலாம். அவ்வாறே தமது உடன் பணிபுரிபவர் அல்லது குழுவினரிடம் உள்ள தவறுகளை நேர்முகமாகச் சொல்லுகின்ற பொழுது அது சங்கடங்களை உண்டாக்கலாம். அதைத் தவிர்க்க, மறைமுகமாக வேறொரு சங்கதி பற்றிப்பேசுகின்ற பொழுது இந்த விஷயங்களையும் புகுத்திவிடுதல் நலம்.
4. வேட்டைக்காரர் (Hunter): ஒரு வேடர் வேட்டைக்குச் செல்வதாகக்கொள்வோம். அவருடைய நோக்கம் ஒரு புலியை அடிப்பதாக இருக்குமானால், அது நிறைவேறும்வரை, அவர் அப்புலியினை சளைக்காமல் தொடர்ந்துகொண்டே இருப்பார். இடையில் ஓய்வெடுப்பதோ, வேறு ஒன்றில் கவனம் செலுத்துவதையோ அவர் செய்வதில்லை. செய்யவும் கூடாது, அவ்வாறு செய்தால் புலி இவரை வேட்டையாடிவிடக்கூடும். அதுபோல் வெற்றி என்ற குறிக்கோளைத் (புலியை) துரத்திச்செல்லுகையில், இடையில் ஓய்தல் கூடாது. இதைத்தான் வள்ளுவரும்
"தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை"
என்று கூறுகிறார்.
5. கட்டிடத்தொழிலாளி (Builder): ஒரு கட்டிடம் எப்படி உருவாக்கப்படுகிறது? ஒரே நாளில் மந்திரத்தின் மூலம் பெரிய கட்டிடத்தைக் கட்டிவிடுவது மாயாஜாலக்கதைகளில் சாத்தியமாகலாம். ஆனால், உண்மையில், எவ்வளவு பெரிய அரண்மனையானாலும் சிறுசிறு மூலப்பொருட்களைக்கொண்டு சிறுகச்சிறுகத்தான் கட்டப்படுகிறது. அப்படி, சிறிய சாதனங்களையும் பொருட்களையும் கொண்டு பெருமாளிகையின் உருவாக்கும் கட்டிடத்தொழிலாளி போல், தம்மிடம் உள்ள பலவிதமான ஆதாரங்கள், தகவல்கள், சாதனங்கள், பொருட்கள் (various resources) இவற்றைக்கொண்டு சீரிய முறையில் நிர்வாகம் செய்து வெற்றி என்ற மாளிகையினைக் கட்டுதல் வேண்டும்.
6.வினாவுபவர், தர்க்கவாதம் செய்பவர் (Asker) : தர்க்கவாதம் என்பது முந்தைய குருகுலப்படிப்பில் மிக முக்கியமாகக் கற்பிக்கப்பட்டு வ்ந்த ஒன்று. எந்த ஒரு பொருள் குறித்தும் ஏன், எதற்கு, எப்படி என்று தொடர்ந்து வினாவுதல் ஒரு சாராரின் பொறுப்பு, அதற்குத்தக்க விடை கூறுதல் மற்றொரு சாராரின் பொறுப்பு. இதனால் இரு சாராருமே ஒரு பொருள் குறித்து ஆழ்ந்து படித்து அறிந்து கொள்வர். அதைப்போலவே, ஒரு பிரச்னையை அணுகும்பொழுது, அதைப் பல கூறுகளாகப் பிரித்து, வினா எழுப்பிக்கொண்டே போனால் மட்டுமே பிரச்னைக்குரிய உண்மையான காரணத்தைக் காண இயலும். பல நேரங்களில் நமக்குக் கிடைக்கும் கருத்து வெளிப்பாடு (feed back) ஒன்றாகவும், உண்மையான காரணம் மற்றொன்றாகவும் இருக்கும். மேலோட்டமான காரணத்திற்கு தீர்வு காண முயற்சி செய்கின்ற பொழுது, பிரச்னை இன்னும் அதிகத் தீவிரமடையவும் கூடும். ஒரு திட்டம் வெற்றி பெறுமா, அதில் உள்ள ஓட்டைகள் என்னென்ன என்று கண்டுபிடிப்பதற்கும் இவ்வாறு வினாக்கள் எழுப்பி விடையறிய முயல்வதே சரியான வழி.
7. பறவை (Bird): ஒரு சிறிய குருவி, தனக்குக் கிடைக்கின்ற சின்னஞ்சிறு குச்சி, வைக்கோல் பிரி, காய்ந்த இலை எதுவானாலும், சேகரித்து அதைத் தக்க விதத்தில் பயன்படுத்தி அழகான, பாதுகாப்பான கூட்டினைக் கட்டிவிடுகிறது. அதுபோல், தம்மிடம் / தம்முடன் பணிபுரிபவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும், தமக்குக் கிடைத்துள்ள கருவிகள் ஆதாரங்கள் (resources) எப்படியிருந்தாலும், அவற்றை சரிவரப்பயன்படுத்தி அழகுணர்ச்சியுடனும், நேர்த்தியாகவும் தமது பணியைச் செய்து முடிக்கவேண்டும்.
8. பழுது பார்ப்பவர் (Mechanic): ஒரு பொருள் பழுதுபட்டுவிட்டால், அதைப் பொறுமையுடன் பிரித்து, ஆய்ந்து, சரி செய்துவிடுவது பழுதுபார்ப்பவரின் குணம். அதுபோலவே, நிறுவனத்தில் அல்லது குழுவில் திட்டத்தைச் செயல்படுத்துகையில் ஏதேனும் தடை நேரிடுமானால், குறைபாடு உண்டாகுமானால், அதைப்பற்றி ஆராய்ந்து தவறினை/குறையினை நீக்கி மீண்டும் திட்டத்தைச் செயல்படவைக்கும் திறன் மிகவும் தேவையான ஒன்று.
9. சேகரிப்பாளர் (Gatherer): பலவிதமான பொருட்களை ஒன்று சேர்த்து, திரட்டி, பின் வகைப்படுத்துதல் இவர் பணி (நாணயம் சேகரித்தல், அஞ்சல்தலை சேகரித்தல்). பல நேரங்களில் இவருக்குக் கிடைக்கும் பொருட்களும் தகவல்களும் தவறானவையாகவும், அவசியமற்றவையாகவும் இருக்கலாம். எனினும் இவர் எதையும் , பொறுமையுடன் ஆராய்ந்து, வேண்டாதவற்றை ஒதுக்கியும் வேண்டியவற்றை வகைப்படுத்தியும் காட்சிப்படுத்துவார் (Display). இவ்வாறே தமக்குக் கிடைக்கும் தகவல்கள், பொருட்கள் முதலியவற்றை சீர்தூக்கி, அவற்றுக்கேற்ற மதிப்பீட்டைச் செய்து, முடிவெடுக்கத் தெரிவது ஒரு நிறுவன வெற்றிக்கும் தனிமனித மேன்மைக்கும் இன்றியமையாதது.
10. காப்பாளர்(Nurturer) : தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவர், தன் நலத்தை விடப் பிறர் நலத்தை அதிகம் பேணவேண்டும் பிறரிடம் பரிவு காட்டவேண்டும். பிறர் சுக துக்கங்களில் ஆர்வம் காட்டுவதும், கனிவுடன் பிறருக்கு உதவுவதும் மற்றெல்லாவற்றையும் விட மிக அடிப்படையான, அவசியமான பண்பு ஆகும்.
இந்தப் பத்து பொறுப்புகளையும் திறம்பட ஒருவரே / தலைவரே செய்ய வேண்டும் என்பது இல்லை. குழுவில் ஒவ்வொருவருக்கும் அவரவர் திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு பொறுப்பினைப் பகிர்ந்தளித்து செயல்பட வைப்பினும் அனைவரும் வெற்றிக் கோட்டினைத் தொடுவது உறுதி.
---------------------------------------------------------------------------------------------------------------------
கி.பாலகார்த்திகா








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















கவனத்தில் கொள்ளவும்...தயவுசெய்து...!!!நன்றி