News Ticker

Menu

காரைநகர் - நாவற்குழி - கல்வி - ஒக்ஸ்போட் (வெள்ளிவலம்)


கடந்த வாரம் காரைநகரை தனிக்கல்விக் கோட்டமாக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் ஈபிடிபியினதும் மகிந்த அரசின் ஆளுநராலும் அந்நடடிவடிக்கை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.

ஊர்காவற்றுரை கல்விக்கோட்டத்துடன் இணைந்திருக்கும் காரைநகரைத் தனியாகப் பிரித்து அதனை தனியான கல்விக்கோட்டமாக்குவதற்கு திட்டமிடப்பட்டது.



இது தொடர்பான ஆரம்பநிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாகவிருந்தது. காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் காரைநகர் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் செயற்படஇருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தீவக கல்விப்பணிப்பாளர் வி. இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறுவதாகவிருந்த இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளவிருந்தார்.

ஆனால் அரசில் அங்கம் வகிக்கும் தமது கட்சியை சேர்ந்தவர் எவரையும் அழைக்கவில்லை எனக்கூறி அந்நிகழ்வை தடுத்துநிறுத்தும்படி ஈபிடிபினரால் ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து கல்வி அலுவலகத்துடன் தொடர்புகொண்ட ஆளுநர் அலுவலகம், குறித்த நிகழ்வை நிறுத்தும்படியும் அதனை மற்றொரு திகதியில் நடத்துமாறும் அந்நிகழ்வில் ஆளுநரும் கலந்துகொள்வார் எனவும் அறிவித்துள்ளது.

சாதாரண கல்விச்செயற்பாடுகளில் எவ்வாறு அரச நிர்வாகம் தலையீடுகளை மேற்கொண்டு தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகின்றது என்பதற்கு மற்றொரு சான்றாக இந்நிகழ்வு தொடர்பான விடயங்கள் நடைபெற்றுமுடிந்திருக்கின்றன.

இதேவேளை நாவற்குழியில் அடாத்தாக குடியேறியுள்ள 188 சிங்கள குடும்பங்களும் தமது பிள்ளைகள் கற்பதற்காக யாழ் சிங்கள மகாவித்தியாலத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் உருவங்களை தாங்கிய பதாகைகளை தொங்கவிட்டுள்ள இம்மக்கள் மூன்றாவது தவணை முடிந்ததும் கொழும்பில் உள்ள தமது பிள்ளைகளை மீண்டும் அழைத்துவரவேண்டியுள்ளதாகவும் அதனால் அவர்களுக்கான கல்வி வசதியை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுள்ளனர்.

அண்மையில் பெய்த கடும்மழைகாரணமாக அங்கு குடியேறிய தமிழ்மக்கள் வெளியேறிய நிலையில் அவர்களது குடிசைகளையும் இவர்கள் சூறையாடுவதாகவும் தமிழ்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாடசாலைகளுக்கு அனுப்பட்ட தமிழ்ப்பாட நூல்களில் தமிழர்களது வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டு  இருட்டடிப்பு செய்யப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுதிட்டவிவாதத்தின்போது உரையாற்றியபோதே தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனால் எதிர்கால மாணவர்கள் தமது கடந்தகால பாரம்பரிய வரலாறுகளையும் தமிழ் மன்னர்களின் பெயர்களையும் கூட தெரிந்துகொள்ளமுடியாமல் இருட்டடிப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

போர் முடிவடைந்து 18 மாதங்கள் கடந்தபோதும் இன்னமும் பாடசாலைகளில் இராணுவத்தினர் தங்கியிருந்து தமிழ் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருப்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஓமந்தை தமிழ் மகாவித்தியாலத்தில் இராணுவத்தினர் தங்கியுள்ளதுடன் மாணவர்கள் மரங்களுக்கு கீழேயிருந்து கல்வியை தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எதிர்கால சந்ததியின் வாழ்வையும் அவர்தம் கல்வி வளத்தையும் சிதைக்கும் முயற்சிகள் போருக்கு பிந்திய காலகட்டத்தில் இன்னொரு வடிவில் முன்னெடுக்கப்படுவதாகவே அறியவருகின்றது.

இதன் மற்றைய பக்கத்தில் ஒக்ஸ்போட் உரையாற்ற சென்ற மகிந்த ராஜபக்ச தனது முயற்சி வெற்றியளிக்காமல் நாட்டுக்கு திரும்பிய நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

ஒக்ஸ்போட் உரையில் தமிழர்களுக்கான தீர்வுதிட்டத்தை முன்வைக்கவிருந்ததாகவும் அதனை தமிழர்கள் குழப்பிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய அரசும் அதன் ஊடகங்களும் கவனம் செலுத்தியநிலையில் புலத்து தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய போராட்டத்தின் மூலமே மகிந்தவின் போர்மமதையுடன் கூடிய பயணம் நிறைவடையாமலே முடிவடைந்திருந்தது.

இந்நிலையில் அங்குதான் தீர்வுதிட்டத்தை வெளியிடவிருந்ததாக வெளிவருகின்ற அவரது கருத்துகளுக்கு பின்னால் இருக்கின்ற கொடூர முகத்தை தமிழ்மக்களால் தெளிவாக இனங்கண்டுகொள்ளமுடியும்.

தமிழர்களது ஒற்றுமையையும் உறுதியையும் குலைக்கவேண்டும் என்பதில் எதிரி எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கின்றான்?

- சங்கிலியன் -

Share This:

No Comment to " காரைநகர் - நாவற்குழி - கல்வி - ஒக்ஸ்போட் (வெள்ளிவலம்) "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM